ஜப்பான் மீது அணுகுண்டு வீச்சு !

ஜப்பான் மீது அணுகுண்டு வீச்சு !
ஹிரோஷிமாவில் அழிவின் அடையாளம் !

Monday, March 25, 2013

யப்பானில் தாய் மொழிபற்றும் , தமிழும், தமிழர் விழாவும் !



நியிகட்டா மாநிலத்தில் (Echigo Yuzawa Town in Niigata Perfecture, Japan ) காலா யூசாவா பனிமழையில் வலைப்பதிவர் : தஞ்சை  கோ.கண்ணன் 



யப்பானிய நாடு, நிப்பான் என்றும் நிஃகோ(ன்) என்றும் அழைக்கப்படும் பெருவள நாட்டினை இரண்டு முறை (2008-இல், 2012-12 இல்) நேரில் கண்டு மலைப்படைந்தேன்! ஒவ்வொரு யப்பானியரும் ஒழுங்கு, கட்டுப்பாடு,எதிலும் தூய்மை, செய்நேர்த்தி, இயல்பான மொழிப்பற்று கொள்வதில் பெருமிதம் கொண்டு வாழ்வதைக் கண்குளிரக் கண்டேன் !
நாட்டுப் பற்று தவிர எங்கும் எதிலும் தாய் மொழியால் உயர் தொழில் நுட்பத்தில், ஏன் அனைத்திலும் அசுர வளர்ச்சி !

I.       ௧. யப்பானுடன் பழந்தமிழரின் 2000 ஆண்டு வணிக உறவு :


தமிழ்நாட்டில்  சென்னையில் உள்ள இன்றைய ப்பானிய தூதரான திரு.டக்கயுக்கி கிட்டகாவா அவர்கள் சங்க காலத்திலிருந்தே தமிழ்நாட்டுடன் ப்பானிய உறவு இருந்ததாகச்  சொல்கிறார். 2000 ஆண்டுகட்கு முன்னர் (கி.மு.100 )   ரோமானியருடன் முத்து வாணிகம் செய்தபோது, நம் தமிழ்க் கடலோடிகள் ப்பானிலிருந்தும்  முத்துக்களை (Outsource) வாங்கி ஏற்றுமதி செய்தனர் என்று வரலாற்றுப் பதிவு செய்கிறார்.  




 திரு.டக்கயுக்கி கிட்டகாவா


௨. ப்பானிய மொழியில் 500 – மேற்பட்ட தமிழ்ச் சொற்கள்: 


i. அம்மா, அப்பா, சல்லி -  போன்ற 500 – மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் யப்பான் மொழியில் புழங்குவதாகவும் பெருமையுடன் சொல்கிறார். (நன்றி: 6-12-2012  இந்தியன் எக்சுபிரசு நாளிதழ்) 
  

ii.மேலும் பல ப்பானிய - தமிழ்ச் சொற்கள் :


   நம்பு = நபு

   யாரு = யர,

   நீங்கு = நிகு ,

   உறங்கு = உரகு,

  கறங்கு = கரகு

  அகல் = அரகு,

  அணை = அண,

  கல் = கர

  கால்வாய் = காவா (கவா)

  
எ.கா:டோக்கியோ நகரில் நடுவில் உள்ள ஆறு “நக்க காவா” = நடு கால்வாய் (ஆறு)    
     

iii.  யப்பானில் தமிழ்ப் பெயருள்ள ஊர்கள்:


“மருதை” என்ற பெயருள்ள ஊர் யப்பானின் வட பகுதியில் இன்றும் உள்ளது. இது மட்டுமா ? மேலும் தமிழரின் வரலாற்றுத் தடங்களாக விளங்கும்  ஒரிசாவிலும், வங்கத்திலும், தைவானிலும், சீனாவிலும் கூட  ‘காஞ்சி” என்ற பெயருள்ள ஊர்கள் உள்ளன.


“காஞ்சி” என்ற ஊர் யப்பானின் தென் மேற்குப் பகுதியில் ஒக்கினாவா கென் (Perfecture) மாநிலத்தில் உள்ளது.

“காஞ்சி”  என்பது சீனப் பட எழுத்துக்களைக் கொண்ட சீனச் சொற்கள் கொண்ட  யப்பானிய மொழிப் பகுதி ஆகும்.





வலைப்பதிவர்  7-1-2012 –ல்  யுசாவ பனிபடர் பகுதிக்கு செல்லுங்கால் எடுத்த படங்கள்
(Directions Tokyo to Marudai, Engaru, Monbetsu District, Hokkaido Prefecture, Japan
1,375 km – about 19 hours 30 mins)

மருதைக்கும் வடமேற்கே “குறில்” என்ற பெயருடைய தீவுக்கூட்டமே உள்ளது. ரசியாவுக்கும் யப்பானுக்கும் பொதுவானதாக இத்தீவுக் கூட்டம் எல்லைப் பிரச்சினையாகவும் உள்ளது. ரசியாவின் கிழக்கு எல்லையில் விளாடி வாசுடாக் பகுதியில் “ஆமூர்” ( ஆமையூர் ) என்ற பெயருடைய ஆறு ஓடுகிறது. (  நன்றி : ஆய்வறிஞர் ஒரிசா பாலு என்கிற சிவ பாலசுப்பிரமணியன்) 


௩.முத்து என்ற தமிழருக்கு ஜப்பானிய அரசின் அஞ்சல்தலை:

பல தமிழ் நூல்களை யப்பானிய மொழியில் மொழி பெயர்த்த சூசோ(JO) மட்சுனுக்கா அவர்களுக்கு உதவிய தமிழரும் தமிழ் நாட்டின்  விடுதலைப் போராட்ட வீரரும் ஆன முத்து அவர்களுக்கு யப்பானிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு நன்றியுடன் பெருமை செய்தது.



                                                           
நன்றி படங்கள் :  “பூர்விகா”  துரை குமார்


௪.யப்பானில் தமிழர் திருவிழாவும் தமிழும் :

யப்பானிய அறிஞர் சுசுமோ ஓனோ, சென்னைப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பொற்கோ போன்ற பெருமக்கள் யப்பானிய மொழி, தமிழ் மொழி பண்பாட்டு உறவுகளை வெளிக்கொணர்ந்தனர். 


                                   
                 யப்பானிய அறிஞர் சுசுமோ ஓனோ



மேனாள் துணைவேந்தர் பொற்கோ

i.       திருமணப் பெண் பார்க்கும் நிகழ்வு :

அந்த காலத்திலிருந்து  யப்பானில் பெண்பார்க்கச்  செல்லும் போது மூன்றாவது நாள் பெண்வீட்டார் திருமணத்திற்குச்  சம்மதம் என்றால் அரிசி இனிப்பு (சருக்கரைப் பொங்கல்) கொடுப்பர். இது பழங்காலத்திலிருந்து  இன்றுவரை  உள்ளது. இலக்கிய, இலக்கணம், பண்பாடு போன்றவை இருமொழிகட்கும் ஒற்றுமையாக உள்ளன.

ii.      “பொங்கலோ பொங்கல்” யப்பானில் “கொங்கரா கொங்கரா”:

 வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் தமிழ்நாட்டில் கொண்டாடும் அதே நாட்களில் அதே முறையில் “கோஷோகட்சு” (Koshogatsu) எனும் பெயரில் பொங்கல் விழா நடக்கிறது. அவர்கள் இதனைச்  சிறிய புத்தாண்டு எனவும் நாம் தமிழ்ப் புத்தாண்டு எனவும் சொல்கிறோம். (அன்று தேசிய விடுமுறை)



நன்றி படங்கள் : “பூர்விகா” துரை குமார் 

பொங்கலோ பொங்கல் என்று நாம் சொல்வதைப் போலவே “கொங்கரா கொங்கரா”  என்றே சொல்கிறார்கள். அவர்கள் மொழிப் படி “பொ” வை - “கொ” எனவும் “லோ”-வை  “ரா” என மாற்றிச்  சொல்கிறார்கள்.




நன்றி படங்கள் : “பூர்விகா” துரை குமார் 

பொங்கலுக்கு முதல் நாள் நம்மைப் போலவே பழைய பொருள்களைக் எரித்துப் போகி  கொண்டாடுவதும் அங்கே உண்டு. அதே போல பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் போலவே குதிரைக்கு அவர்கள் விழா எடுக்கிறார்கள்.

I.        யப்பானியரின் இனப் பற்று, மொழிப் பற்றால் எழுச்சிமிகு நடவடிக்கைகள்:
i. போர்ச்சுகீசியர் நாடு கடத்தப்பட்டனர் !
தொகுகாவா இயேயாசு (கி.பி.1603-1605) என்னும் சோகன் தலைமுறையைச் சார்ந்தவர் யப்பான் மன்னர் ஆனார். அவர் அரசராவதை அப்போது யப்பானில் நுழைந்திருந்த போர்ச்சுகீசியர்கள் (கி.பி 1600 ) எதிர்த்தனர். எனினும் அவர்கள் எதிர்ப்பையும் மீறி அவர் அரசரானார்.
1614–இல் நாகசாக்கி என்னும் இடத்துக்கு வரச்செய்து அந்த போர்ச்சுகீசியரகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு செய்தார் யப்பானிய அரசர் !
ii. பிரான்சிஸ் சேவியரின் தோல்வி :
இந்தியாவுக்கு வந்து மத மாற்றம் செய்து புகழ் பெற்ற பிரான்சிஸ் சேவியர் 1549-இல் யப்பானுக்குச் சென்று அந்நாட்டு அரசரை மதம் மாற்ற முயன்று தோல்வியுற்று 1553- இல் கோவாவுக்குத் திரும்பினார். யப்பானில் 1587 - இல் கிருத்துவ மதப் பிரசாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 1612 – இல் கிருத்துவ மதம் தடை செய்யப்பட்டது.
iii. ஸ்பானியர்களுக்குத் தூக்கு தண்டனை :
1616–இல் அரசின் சந்தேகத்துக்கு ஆளான ஸ்பானியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.
iv . ஐரோப்பியர்க்கு உதவிய நாட்டுடன் உறவு முறித்தல் :
இவர்கள் வருகைக்குக் காரணமாகவும் துணையாகவும் இருந்த பிலிப்பைன்சு நாட்டுடன் யப்பான் உறவை முறித்துக்கொண்டது.
v . ஐரோப்பியரைத் தனிமைப் படுத்தித் தீவில் சிறை வைப்பு :
போர்ச்சுகீசியர், ஸ்பானியர், ஆங்கிலேயர் , டச்சுக்காரர்  ஆகியவர்களின் செயல்கள் நம்பிக்கைக்கு உரியனவாக இல்லாமையால், நாகசாகிக்கு அருகில் உள்ள தேஷிமா தீவுக்கு அனுப்பி அங்கும் ஓராண்டுக்கு மேல் இருப்பது கூடாது என்றும் அவர்கள் தங்கள் மனைவியரைக் கொண்டு வருவதும் தடை செய்யப்பட்டது .
vi. யப்பானில் நுழைய ஐரோப்பியர்க்குத் தடை - மரண தண்டனை :
1637 -38- இல் ஸ்பானியர்களும், போர்ச்சுகீசியரும் யப்பானுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது . மீறினால் மரண தண்டனை என்றும், அவர்களை ஏற்றி வரும் மாலுமிகளும் தீக்கு இரையாவார்கள் என்றும் அறிவித்தார்கள். மறைவாக வாழ்ந்து வந்த ஐரோப்பியர்கள் 61 – பேர்  கண்டு பிடிக்கப்பட்டுத் தூக்கிலும் இடப்பட்டார்கள்.

நன்றி: மேனாள் துணைவேந்தர் க.ப.அறவாணன்
     . இரண்டாம் உலகப்போரில் மேலை நாடுகளின் பழிக்குப் பழி :



ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட இடத்தில் நினைவுச்சின்னம் !


      


யப்பானிய  நினைவுச்சின்ன அருங்காட்சியகத்தில் தமிழில் எனது பதிவு!

இரண்டாம் உலகப்போரில் இப்படி வெற்றிகரமாகவும் , மாவீரத்துடனும் மேலை நட்பு நாடுகளை எதிர் கொண்ட யப்பானியர்க்கு பரிசுதான் இரு அணு குண்டுகள் ! இப்பொழுது புரிகிறதா ? அணுகுண்டு வீச ஏன் நாகசாக்கி நகரம் தேர்ந்து எடுக்கப்பட்டது ? ஏனெனில் அதே நாகசாக்கியில்தானே ஐரோப்பியர்கள் சிறை வைக்கப்பட்டு, மரண தண்டனைக்கு ஆளானார்கள். பழிக்குப் பழி என முந்நூறு ஆண்டுகள் கழித்து ஐரோப்பியர் அமெரிக்கா மூலம் கொடுத்த கொடுந் தண்டனை அல்லவா ?





அனுக்கதிர்கள் நெருப்புக் குழம்பு குடை போல பரந்து விரிந்து நிறைந்து யப்பனியரைப் பொசுக்கியது !




இரண்டாம் உலகப்போருக்குக் காரணமான ஜெர்மனியின் மீது ஏன் அணுகுண்டு வீசப் படவில்லை ? அது ஐரோப்பிய நாடு என்ற ஒரே காரணம்! அமெரிக்கா மீது  தாக்கியதாலும், ஆசிய நாடு என்பதாலும் யப்பான் மீது அணுகுண்டு வீச்சு ! நாமும் வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டாமா ?

III.  i. உலக வரலாற்றில் பின் நோக்கிய ஒரு சிறு பயணம்:
 
சீனா , ஜப்பான் , தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகள் மட்டும் வெளிநாட்டு ஆளுகையின் கீழ் வந்ததில்லை என்பது எதனால் ? சற்றே சிந்தித்தால்  இந்த மூன்று நாடுகளும்  தம் மொழி, இனம், பண்பாடு  காக்கத் தவறியதில்லை.  இவற்றைக் காக்கத் தவறியதால்தான் தமிழனுக்கு இன்றைய இழி நிலை !
 
ii. பிறநாடுகளுடன் வரலாற்று ஒப்பாய்வு :
 
தமிழரின் இற்றை நோய் நாடி அவர்தம் நோய் முதல் நாடி அதற்கும் மருந்து கண்ட மேனாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்கள் "தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ?" எனும் தன் நூலில் சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே ஐரோப்பியருக்கு அடிமையாகாமல் தன்மானத்தை இழக்காமல் போராடி நின்றன எனத் தெரிவிக்கிறார்.
 
iii. தன் நிலை அறியாத சான்றோர் யார்?
 
ஆனால்  நாம் இனம், மொழி, பண்பாடு, வரலாறு ஆகிய நான்கு தளங்களில் நம்மை ஆய்ந்தறிந்தோமா ?  ஐயமே ! நோயுற்ற தமிழினம் தனக்கு நோய் உள்ளது என்று உணரின் அன்றோ மருந்தைத் தேடுவர்!தொடுவர் ! துடித்தும் எழுவர் ! நாம்தான் தன் நிலை அறியாச் சான்றோர் ஆயிற்றே ! தொடர்ந்து தமிழ்நாட்டு வரலாற்றின் இருண்ட காலமாகிய களப்பிரர் காலந்தொட்டு, பின்னர் தொடர்ந்த பண்பாட்டுத் தாக்குதல்கட்கு ஆளானோம்


iv.சீனம் ஐரோப்பியருக்கு அடிமை ஆகாமை :
 
சீனத்து வரலாற்றைத் தெரிந்தவர்கள் பிரிட்டிஷ் அரசின் குள்ளநரித்தனத்துக்கு முதல் முயற்சியிலேயே குட்டு வைத்து சீனத்துள்ளே நுழைய பல கட்டுப்பாடுகள் விதித்து மீறினால் கடும் தண்டனை என மிரட்டியும் பின்னர் அனுமதித்தார்கள்.
 
அப்படியும் சீனர்களைக் அபினி (ஓப்பியம்) போதைக்கு அடிமையாக்கி ஆங்கில வணிகர் என்ற போர்வையில் வந்த நாடு பிடிக்கும் குள்ள நரிக் கூட்டம் தன் புத்தியைக் காட்டியது.
 
1729-இல் சீன அரசு அபினிக்குத் தடை விதித்தது! பிரிட்டிஷ் அரசு தன்னாட்டு அபினி வியாபரிகளைக் கண்டிக்கத்தானே வேண்டும்! 
செய்தார்களா ?  

ஆனால் மாறாக ஆங்கில வணிகத்துக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் இரண்டு கப்பல்களை சீனாவின் கான்ட்டன் நகருக்கு அனுப்பி வைத்தது பிரிட்டிஷ் அரசு ! தரை இறங்கிய வீரர்கள் ஒரு சீனரைக் கொன்று சீன வணிகக் கப்பல்களை மூழ்கடித்தனர்!
 
1840-இல் சீனத்துக்கு எதிரான முதலாம் அபினிப் போர் எதிர்பாராமல் நடந்தது. அந்த ஆங்கிலேயரை அடித்தும் விரட்டினர் கான்ட்டன் மக்கள்.
 
1842- இல் மீண்டும் ஆங்கிலேயர் அபினிப் போரைத் திணித்தனர்.வெட்கம் ! வெட்கம்! இதில் இந்தியாவிலிருந்து வந்த 10000 பேர் கூலிப்படையினரென்று சீன வரலாற்று ஆசிரியர் சுட்டுகின்றனர்.
 
போர்ச்கீசியரும், ஸ்பானியரும், பிரிட்டிஷாருடன் பிரெஞ்சுக் காரனும் கூட்டு சேர்ந்து தொடர்ந்து சீனத்துக்கு தொல்லை கொடுத்துவந்தனர்.
 
31-01-1949 அன்று பொதுஉடைமைப் படைகள் பீக்கிங்கைக் கைப்பற்றும் வரை ஓயாத போராட்டத்தை சீன மக்கள் தொடர்ந்து நடத்தினர்.
 
இப்போதாவது புரிகிறதா தமிழர்களே ! ஆங்கில வணிகர்கள் என்ற போர்வையில் வந்த நாடு பிடிக்கும் நரிகளே பிரிட்டிஷ் அரசும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் என்றே !
 
v. தாய்லாந்து ஐரோப்பியரால் அடிமை கொள்ளா நாடு !
மன்னர்கள்:
 
௧. இராம கமேங் (கி.பி 1287-1317)
௨.இராம திபடி (கி.பி 1350-1369 )
௩ .திரைலோக் (கி.பி. 1448-1488)
மூவரும் மொழி, எழுத்து, மதம் ஆகிய மூன்றும் தாய் மொழி மணம் கமழுமாறு பார்த்துக் கொண்டது இன்று வரை அவை மாறாமல் இருப்பதற்குக் காரணம் !
அரசரை இறைமை வாய்ந்தவர் என சீன, ஜப்பானிய , தாய்லாந்து ஆகிய நாட்டு மக்கள் நம்பியது ஆளுவோர் வெளியிலிருந்து வருவதும் தடுக்கப் பட்டது .

V. (அ). யப்பானின் வழங்கு மொழி யப்பானிய மொழியே:
மேல்நாட்டாரின் பண்பாட்டுத் தாக்கத்தை யப்பானியரின் போர்க்குணமும் தாய் மொழிப் பற்றும் தவிடு பொடியாக்கிற்று . இன்றளவும் இந்தத் தன்மானம் அந்த நாட்டுக்குக் கொடுத்த பலனை என் யப்பானிய பயணத்தில் (அக்டோபர் 2008) கண்ணார மனம் குளிரக் கண்டேன். உலக G-8 என்கிற பணக்கார நாடுகளில் ஒன்றான யப்பானில் வழங்கு மொழியோ தாய்மொழி மட்டுமே !
 

ஆ).அவர்களின் எளிமையும், உடல் நலம் பேணும் சிறப்பும்: 


இப்படி உலகின் பெருவள நாடானாலும் ஆனாலும் நாம் மறந்த எளிமையான சைக்கிளை மிக அதிக அளவில் டோக்கியோ மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் இன்றும் பயன் படுத்துகிறார்கள். ஆனால் நாமோ ?





டோக்கியோ  நகர் முழுதும் எங்கும் எதற்கும் சைக்கிளே பயன்பாட்டில் உள்ளது !

எங்கும் எப்போதும் ஓடிக்கொண்டும், நடந்தும், உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டும், விளையாடிக்கொண்டும், உழைத்துக் கொண்டும் தேனீக்களாய் வாழ்கிறார்கள்.

(இ) எங்கும் எதிலும் யப்பானிய மொழியே :

டோக்யோ விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களில் மட்டும் போனால் போகிறது என்று பெயர் பலகை ஆங்கிலத்தில் உள்ளது. எங்கும் எதிலும் யப்பானிய மொழியே ! ஆங்கிலத்தின் துணை இன்றி இன்றுவரை யப்பான் விரைந்த உயர்ந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது.





எழுத்தில்லா யப்பானிய மொழி , சீன  எழுத்துக்களைப் பயன்படுத்தி “ஹிராகானா” என்ற மொழிப் பகுதியில் யப்பானியச் சொற்களையும், சீனத்துச் சொற்களைக் ”காஞ்சி” என்ற மொழிப் பகுதியிலும் ,“கத்தகானாஎன்ற செந்தரப்படுத்திய அயல் மொழிச் சொற்கள் என மூன்றாகப் பிரித்த மொழியே ஆகும். இவ்வாறு இனம், மொழி, நாடு என உறுதியாக இருந்த யப்பானியர் அமெரிக்கர்களை, ஐரோப்பியர்களை திணறடித்து அடைந்த வெற்றிகள் வரலாறு படைத்தன !
 
VI. யப்பானியரின் இனப் பற்று, மொழிப் பற்று , நாட்டுப் பற்று கொடுத்த வெற்றிகள் :
 
i) அந்தக் காலத்தில் மேலை நாட்டினர் பெரும் பொருள் செலவு செய்தும், கடும் உழைப்பை நல்கியும், பல ஆண்டுகள் காத்திருந்து கண்டவைகளை உடனே யப்பானியர்கள் தம் தயாரிப்பாக வெளியிட்டனர் !
ii) இன்றோ யப்பானியர்கள், உலகத்தரம் வாய்ந்த பாலங்கள், ஆண்டுக்கு பத்தாயிரம் முறைகளுக்கு மேல் வரும் நில அதிர்வுகளைத் தாங்கும் விண் முட்டும் கட்டடங்கள் . ஒரு கிலோ மீட்டர் உயரக் கட்டடம் எனச்  சாதனைகள் !

iii) அதிவேக இரயில் வண்டி : சின்கான்சின் என ஜப்பானிய மொழியில் பெயர் வைத்து மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. அலுங்காமல் குலுங்காமல் இனிமையான பயணம். டோக்கியோவிலிருந்து 800 கி. மீ தொலைவில் உள்ள ஹிரோஷிமா நகரை 3 மணி 30 மணித்துளிகளில் சென்றடைகிறது.


.


iv) மருத்துவத்தில் உலகத்தில் சிறந்த ஆராய்ச்சிகள் நடக்கும் நாடும் யப்பானே! மகிழுந்துகள், மின் அணுக் கருவிகள் , ஒளிப் படக் கருவிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என எண்ணிலடங்கா சாதனைகள் !

v. யப்பானில் நான் கண்ட இடங்கள் :
 
நிசி-காசாய், அசகுசா,  கின்சா , அகிபாரா டோக்கியோவில் , காமகூரா,
ப்யுசியாமா, அக்கொனே, இரோசீமா, மியாசிமா , மிசென் மலை, யுசாவா ஆகியன .




பனிபடர் காலா யூசவா பனிமழையில் !




என் கண்ணோட்டத்தில் யப்பானும், அவர்தம் பண்புகளும்!
 

யப்பான் என்று அறியப்படும் நாடு தன்னை நிப்பான் என அழைப்பதையே விரும்புகிறது ! நிஃகோ(ன்) எனவும் அந்நாடு அழைக்கப்படுகிறது !
ஹிரோஷிமா , நாகசாகி நகரங்கள் அணுகுண்டால் தரைமட்டாகி பல லட்ச மக்கள் பொசுங்கி பேரழிவை அடைந்தனர் ! பீனிக்ஸ் பறவையைப் போன்று சாம்பலில் இருந்து எழுந்த நாடு !
 

வல்லரசுகளுடன் பொருளாதாரப் போட்டியில் முன் நிற்கிறது. ஜி - 8  
 நாடுகளில் வரிசைப் படுத்தப் பட்டுள்ள பணக்கார நாடு ! உழைப்பு , கடும் உழைப்பு  என வேறொன்றை அறியா மக்கள் ! "செய் அல்லது செத்து மடி " இலக்கணமே நிப்பானியர்கள் ! தற்கொலையிலும் முன்னணி வகிக்கும் நாடே ! 

அவர்கள் தேனீக்களைப் போல் உழைத்து மடியும் இனம் ! வாழ்ந்து அனுபவிக் கிறார்களாவென்பது மிகப்பெரிய கேள்விக்குறியே !
விட்டால் உலகையே தன் குடைக்குள் கொணரவேண்டும் என்ற வெறியும் அவர்தம் வரலாற்றில் உண்டு. சீனத்தின் மஞ்சூரியா , கொரியா போன்ற நாடுகளை ஆக்கிரமித்த நாடு நிப்பான்.போஸ்டன் தேநீர் விருந்து அமெரிக்க நாட்டின் வரலாறு !
 

உலகில் அமெரிக்க நாடு இன்று வல்லாதிக்க வல்லரசானதும் , பெருவள நாடென்று பெயர் பெற்றதும்  - நிப்பானின் மீது போடப்பட்ட அணுகுண்டு களுக்குப் பின்னர்தானே !


உலகம் உன்னிப்பாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய நாடு யப்பான் நாடு !

தாய் மொழிப்பற்றிலும் இனப் பற்றிலும் தமிழர்கட்கு வழி காட்டும் நாடும் யப்பான்தான் !


 யப்பானிய மொழி வழி யப்பான் அடைந்த உயர் கட்டமைப்பு: தாய் மொழி கொடுத்த நற்பலனே !


பின் குறிப்பு :
படங்கள்  சொல்லும் பாடம் : வலைத்தள இணைப்பைக் காண சொடுக்குக : 
உறலி :

https://plus.google.com/u/0/photos/114340434479747685316/albums/5255457200974168913?authkey=CKn2kMLU9dvyBw

 இந்த வலைத்தளம் கட்டுரையாக "இனிய உதயம்" இலக்கிய இதழின் "பிப். 2013  திங்களில் வெளிவந்தது.